Sunday 22 June 2014

வலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா?

உறவுகளே! ஊடகங்களைப் பொறுத்தவரையில் படைப்பை ஆக்குவோர் படைப்பாளி என்றும் படைப்பை மதிப்பீடு செய்வோர் திறனாய்வாளர் என்றும் படைப்பை படிப்போர் / வாசிப்போர் / கேட்போர் / பார்ப்போர் தான் படைப்பின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாசகர் எனலாம். வலைப்பூ ஊடகத்தில் வலைப்பதிவர், கருத்துப்பதிவர், வாசகர் ஆகிய மூவரையும் காணலாம்.

ஊடகங்களில் திறனாய்வுக்கும் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வுக்கும் இடையில் என்ன உறவு இருக்கும்? படைப்பை வாசகர் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கத் திறனாய்வு உதவுகிறது. படைப்பின் பயன், தரம், சுவை எனச் சுட்டி வாசகர் வாசிக்கத் தூண்டவும் படைப்பாளி சிறந்த படைப்பை ஆக்கத் தூண்டவும் திறனாய்வு உதவணும்.

வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) என்றாலும் இதே நோக்கில் தான் அமைய வேண்டும். ஊடகங்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்? வலைப்பூக்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  வாசகர் பார்வைக்கு வாசகரை நாடும் அல்லது வாசகருக்கு அண்மையில் உள்ள ஊடகங்களை நுகரும் வாசகர்களே ஊடகங்களில் காணலாம். ஆனால், வலைப்பூக்களில் ஒரு வலைப்பூப் பதிவருக்கு மற்றைய வலைப்பூப் பதிவரே வாசகராக இருப்பர். மாறாகத் தேடுபொறிகளூடாகத் (Google) தகவல் தேடுவோரும் வாசகராக இருக்கலாம்.

இந்நிலையில் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா? ஆம்! தேவைதான்! கருத்துப்பகிர்வைக் கண்ட பிறரும் குறித்த பதிவைப் படிக்க வாய்ப்பு அதிகம். ஆகையால், பதிவை வாசகர் பார்வையிடவும் குறித்த வலைப்பதிவர் சிறந்த பதிவுகளை ஆக்கவும் கருத்துப்பகிர்வு (Comment) உதவுகிறதே! எவர் தனது வலைப்பூப் பதிவுகளிற்கு அதிக கருத்துப்பகிர்வு (Comment) பெற்றிருக்கிறாரோ அவர் வலைப்பூப் பதிவர்களிடையே முன்னணிப் (பிரபல) பதிவராக மின்னுகிறார் என்று பொருள்கொள்ளலாம்.

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் தமது தளத்தில் பதிவிடுவதோடு நட்புக்காகப் பிற வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வதும் வழமை. ஆயினும், அறிவுப்பசி உள்ள வலைப்பதிவர்கள் இதற்கப்பாலும் சென்று பல வலைப்பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகச் சிறந்த பதிவைக் கண்டாலோ கருத்து முரண்பாட்டைக் கொண்ட பதிவைக் கண்டாலோ அதன்பால் விருப்புக் கொண்ட வலைப்பதிவர்கள் கருத்துப்பகிர்வதும் உண்டு.

ஆயினும், சில வலைப்பதிவர்கள் பிறர் தமது வலைப்பூக்களில் கருத்துப் பகிர்ந்தாலும் தாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப்பகிர முன்வருவதில்லை. நாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப் பகிருவதால் என்ன நன்மை? முதலில் நாம் சிறந்த கருத்தைப் பகிருவதால் எம்மை அடையாளப்படுத்துகிறோம். இரண்டாவது குறித்த வலைப்பதிவரை ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக பலரது வலைப்பூக்களுக்குச் செல்வதால் எமது வலைப்பக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டுகிறோம்.

எனவே, வலைப்பூக்களை நடாத்தும் நாம் தேடுபொறிகளூடாக (Google) வரும் வாசகர் படித்தால் போதும் என பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிராமல் இருப்பது தவறு என்பேன். நமது வலைப்பூக்களின் முதல் வாசகர் பிற வலைப்பதிவர்களே என்றுணர்ந்து பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிர்தலே நன்று என்பேன்.

கருத்துப்பகிரும் (Comment) போது எமது விளம்பரங்களைப் போட்டுத்தள்ள வேண்டாம். உங்கள் வலைப்பூக்களது பிந்திய பதிவின் இணைப்பை உங்கள் கருத்தின் கீழ் நுழைப்பதில் தவறில்லை. ஆயினும் குறித்த வலைப்பதிவரை நோகடிக்கும்படி கருத்துப் பகிர வேண்டாம்.

உங்களுக்கே தெரியும் முன்னணிப் பதிவர்கள் எல்லோரும் உங்கள் வலைப்பூவில் கருத்துப் பகிரும்போது "நல்ல பதிவுக்கும் பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்" எனத் தனது கருத்தின் கீழ் இடுவார்கள். அதேவேளை "இந்த இடத்தில் இப்படி வர வாய்ப்புண்டா? எனக்கேதோ தவறு போன்று தெரிகிறது. ஆயினும் தங்கள் பக்கத்தில் வேறு விளக்கங்கள் இருக்கலாம், அதுபற்றி எனக்கு விளக்கம் தாருங்கள்!" என்று வலைப்பதிவரைக் குத்திக் குதறாமல் நோகடிக்காமல் பிழை சுட்டுபவர்களும் உள்ளனரே!

எனவே வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான். தங்களை அடையாளப்படுத்தவோ தங்களது வலைப்பூக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டவோ பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று நடுநிலைமையுடன் (பதிவர் பக்கத்திற்கும் வாசகர் பக்கத்திற்கும் இடையே நின்று) பதிவை மதீப்பீடு செய்யலாம். குறித்த பதிவில் சுட்டப்பட்ட செயல்களை முன்மொழியப்பட்ட கருத்துக்களை மதீப்பீடு செய்யலாம். அதாவது தங்கள் கருத்து  வாசகர்களையும் பதிவரையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஆகக்குறைந்த சொல்களால் “சிறந்த பகிர்வு, பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள், சுவையான பதிவு” என்றவாறு கூட உங்கள் கருத்தைப் பகிரலாம். "எடே யாழ்பாவாணா" என்பதை "அடேய் யாழ்பாவாணா" என்று திருத்தி உதவுங்கள் எனப் பிழைகளையும் நோகாமல் சுட்டிக்காட்டலாம். எப்படியோ வலைப்பூக்களை முன்னணிக்குக் கொண்டுவரவோ பின்னுக்குத் தள்ளவோ நாம் வழங்கும் கருத்துப் பகிர்விலேயே (Comment) தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

16 comments:

  1. நிச்சயமாக ......கருத்து பகிர்வுகள் படைப்புக்கான உற்சாகம் தரும் ஊக்க மருந்துகள்..கைதட்டலகள் இல்லாது கலைஞர்கள் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. பதிவில் நாம் எழுதும் சிலவிஷயங்களைவிட கருத்துப்பகிர்வில் இன்னும் சுவையான பல விஷயங்களும் தெரிய வரும்.

    கருத்துப்பகிர்வு தேவையான ஒன்றே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பல சமயங்களில் படைப்பைவிட
    பின்னூட்டங்கள் மிகச் சிறப்பாக அமைவதுண்டு
    குறிப்பாக மஞ்சு பாஷினி மற்றும் அப்பாத்துரை
    அவர்களின் பின்னூட்டம்
    விரிவான அருமையான அலசல்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. கண்டிப்பாக தேவை...

    அடுத்த தொழிநுட்ப பகிர்வு இதைப்பற்றித் தான்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. பதிவு நாலு வரி ,கருத்துரைகள் நாற்பது வரி ..(நீங்கள் சொல்வதைப் போலவே )இதுதான் என் பாணி... நான் முன்னணிக்கு வர இதுவே காரணம் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. கருத்துப் பதிவுகள் / பின்னூட்டங்கள் அவசியம் தேவை. யாரோ ஒருவர் நம்மைக் கவனிக்கிறார என்ற எச்சரிக்கை உணர்வை அவை உண்டாக்கும். அதனால் எழுதுபவனின் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கிறது. முக்கியமான கருத்துக்களைப் பதிவிடும்பொழுது, பின்னூட்டங்களே பெரிய விவாதக்களமாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மேலும், யாருக்கு என்னமாதிரி கருத்து பிடிக்கிறது என்றும் எழுதுபவன் இதன்மூலம் புரிந்துகொள்ளவகை செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான்.
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.