Monday 9 June 2014

வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்


நான் 1987 இருந்து எழுத்துலகில் காலடி வைத்ததாலும் 25/09/1990 இலே எனது முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அதுபோல 1995 இல் கணனியைப் படித்தும் 2010 இலிருந்தே இணைய வழியாக எனது இலக்கியங்களை வெளிக்கொணர முயன்றேன். அப்படியிருந்தும் 2012 இலேதான் வலைப்பூப் பக்கம் தலையைக் காட்டியிருக்கிறேன். இந்த இழி நிலைத் தகுதியோடு மேற்காணும் தலைப்பில் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர முனைகின்றேன்.

வலைப்பதிவர்கள் வலைப்பூவை நடாத்தத் தொடங்கியதும் தமது பதிவுகளை இட்டு நிரப்பியதும் முடிந்துவிட்டதாக இருந்துவிட முடியாது. அப்பதிவினை வாசிப்போர் கண்ணுக்குக் காட்டிக்கொள்ள வேணடியிருக்கிறது. அதற்காக லிங்டின், டுவிட்டர், கூகிள், பேஸ்புக் எனப் பல மக்களைய (சமூக) வலைத்தளங்களில் இட்டுப் பரப்புகிறோம். மேலும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள், தமிழ்வெளி, இன்ட்லி எனப் பல திரட்டிகளிலும் பதிவிடுகின்றோம். இத்தனையும் செய்த பின்னும் எத்தனை வாசகரைப் பெருக்கினோம் என்றால் மிக மிகக் குறைவே!

வாசகரைப் பெருக்கிக்கொள்ள முடியாமைக்கு வலைப்பதிவர்கள் தான் காரணம் என்பேன். ஏனோ தானோ என்று எப்படியாவது பதிவிட்டால் போதுமென்று இருப்பது, பிற அறிஞர்களின் பதிவை மீள் பதிவு செய்வது, பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுதல், பிறரது பதிவுகளிலிருந்து பொறுக்கித் தமது பதிவுகளில் நுழைத்தல் போன்ற குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்.

பொறுப்புள்ள பதிவாரக மிகச் சிறந்த பதிவுகளை ஆக்கிப் பதிவிடலாம். பிறரது பதிவுகளில் இருந்து பொறுக்கிய வரிகளின் பின்னே குறித்த வலைப்பூ முகவரியை இடலாம். பிறரது பதிவை மீள்பதிவு செய்வதைவிட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அறிமுகம் செய்யலாம். எப்படியாயினும் ஏழலில் (வாரத்தில்) ஒரு பதிவு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவு அல்லது மாதத்திற்கு மூன்று பதிவு என்ற போக்கில் பதிவுகளை இடலாம். இத்தனையும் செய்தால் உங்கள் வலைப்பூ தரமானதாக மேம்படுத்தலாம். ஆனால் வாசகர் எண்ணிக்கை பெருக்கவோ பதில் கருத்துத் (Comments) திரட்டவோ முடியாது என்பேன்.

ஆமாம்! பிறரிடம் எதிர்பாரப்பதை நாமே முதலில் வழங்கினால் முடியும் என்பேன். எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றவராவார். இதுவரை 891 பதிவர்கள் அவரது தளத்தில் பதிவிட்டுள்ளனர். (சான்று : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html) அப்படியாயின் அவர் ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நாடித் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். வலைப்பூ நடத்தும் போது ஏனைய வலைப்பூக்களுக்குச் சென்று அவரவர் சிறப்பைக் கற்றுக்கொண்டு கருத்துப்பகிர வேண்டும். அப்போதுதான் சிறந்த வலைப்பதிவராக முன்னேற வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மணம் திரட்டி ஒன்றே போதும். அதே வேளை கூகிள் பிளக்கர், வேர்ட்பிரஸ் Reading List இல் இணைத்த தளங்களுக்குச் சென்று கருத்துப் பகிர்ந்தால் போதுமென நம்புகிறேன். எப்படியிருப்பினும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப் பகிர வேண்டும். அப்போது தான் எமது வலைப்பூ அறிமுகம் பலருக்குக் கிட்டும். வலைப்பூ பற்றிய நுட்பங்களை அறிய கீழ்வரும் இணைப்பை சொடுக்குக.

வலைத்தள நுட்பம் (திண்டுக்கல் தனபாலன்)

வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். புதிய பதிவர்கள் மூத்த பதிவர்களின் வழிகாட்டலின்படி முன்னேற முயற்சி எடுக்கவும். அப்போதுதான் வலைப்பூக்களூடாக உலகெங்கும் தூய தமிழ் பரப்பலாம்.

13 comments:

  1. அண்ணன் தனபாலனின வழி நடப்போம்... வலையுலகில் சரிததிரம்(!) படைப்போம்...

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலிருந்து வாத்தியார் கருத்திட்டால் சென்னை பதிவர்கள் அனைவரும் கருத்திட்ட மாதிரி...! நன்றி...

      Delete
  2. //வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். //
    சரியாகச்ச் சொன்னீர்கள் ஐயா!

    ReplyDelete
  3. நன்றி நன்றி ஐயா...

    உங்கள் பதிவிற்கு பதில் சொல்ல சில பல பதிவுகள் எழுத வேண்டியிருக்கும்... முடிந்தால் தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சில பதிவுகள் அல்ல பல பதிவுகள் எழுதுங்கள். உங்களால் முடியும்! தங்கள் வழிகாட்டலைப் பின்பற்ற நாம் எல்லோருமே காத்திருக்கிறோம்.
      தங்கள் ஆய்வு முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
      மிக்க நன்றி.

      Delete
  4. எந்த வலைபதிவையும் வாசித்து முடித்து கருத்திடச் சென்றால், அங்கே பெரும்பாலும் முதல் ஆளாக தனது பின்னூட்டத்தை அளித்திருப்பார் தனபாலன் அவர்கள்.... நல்ல கட்டுரை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
      உங்கள் யாழ்பாவாணன்.

      Delete
  5. எல்லாம் நேரப் பிரச்சனைதான்.

    நான் வலைப்பதிவு ஆரம்பித்தபோது பதிவர்கள் எண்ணிக்கை நானூற்றுச் சொச்சம். இப்போ பாருங்க.... 11,701.. அசுர வளர்ச்சி. அநேகமாக பாதிக்கும் மேலானவர்கள் அருமையாகவே எழுதுகின்றனர்.

    ஒரு இடுகைக்கு ஒரு நிமிட் என்றாலும் கிட்டத்தட்ட ஆறாயிரம் வேணுமே!!!!

    ReplyDelete
    Replies
    1. வலைப்பூக்கள் பெருகினாலும் அதில் "பாதிக்கும் மேலானவர்கள் அருமையாகவே எழுதுகின்றனர்" என்பது உண்மை தான்.

      மிக்க நன்றி.

      Delete
  6. ஆமாம், எழுதுவதை அறிவிக்கவும் வேண்டும்.
    திரு.தனபாலன் அவர்கள் செய்யும் பணி பெரிது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. தேவையான பதிவு நண்பரே. இளம்பதிவர்கள் உணரவேண்டிய நுட்பங்களை அழகுபட மொழிந்தீர்கள்.

    நம் சிந்தனை, அதை வெளியிட ஒரு வலைப்பதிவு, மக்கள் பார்வைக்காக ஒரு திரட்டியில் சேர்த்தல், நல்ல படைப்புகளை நாடிச் சென்று கருத்துரை வழங்குதல் ஆகிய நுட்பங்களே நம் வலைக்குப் பிறரை வரவழைக்கும் நுட்பங்கள் என்பதை நன்கு சொன்னீர்கள்.

    வந்த பார்வையாளர்களை மீண்டும் வரவைக்கும் நுட்பங்களும், சரியான தலைப்புகளும், தேவையான படங்களும், கண்களை உருத்தாத பக்கவண்ணம், எழுத்துரு அளவு, தேவையான வலைகுறித்த விவரங்கள் இவையெல்லாம் பார்வையாளர்களைக் கவரும் உத்திகளாகும்.


    எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சொல்லும் கருத்துக்களைவிட நம்முடைய உண்மையான சுயவிவரம், நம்முடைய நிழற்படம் ஆகியன நம் எழுத்துக்களுக்கு நம்பகத்தன்மையைத் தரவல்லன என்பது என் கருத்து நண்பரே.

    தன் உண்மையான சுயவிவரத்தைக் காட்டாத எந்தப் பதிவையும் நான் வாசிப்பதில்லை, அவர்கள் மறுமொழியிட்டாலும் நான் அதை வெளியிடுவதில்லை.

    இது எனது அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. "எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சொல்லும் கருத்துக்களைவிட நம்முடைய உண்மையான சுயவிவரம், நம்முடைய நிழற்படம் ஆகியன நம் எழுத்துக்களுக்கு நம்பகத்தன்மையைத் தரவல்லன என்பது என் கருத்து நண்பரே." என்ற முடிவை நானும் விரும்புகிறேன்.

      படைப்பாக்கம்/ இலக்கியம் புனிதமானது. அதற்குத் தனியாள் அடையாளம் தேவை. படைப்பைப் படித்தால் ஆளின் அடையாளம் தெரியும். அந்த ஆள் எந்த ஆள் என்றறியாமல் வாசகர் நிறைவடைவதில்லை. எனவே, தனியாள் அடையாளம் வெளிப்படுத்த அஞ்சும் பதிவர்கள் இலக்கியக் களவு செய்யலாமென வாசகர் எண்ண இடமுண்டு. இது எனது பக்க வெளிப்பாடு.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.