Saturday, 31 May 2014

ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி விடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.

இனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.

சிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.

வலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே! எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.

மேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.

1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே!
2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே!
3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே!
4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே!
5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே!

என் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.

Friday, 30 May 2014

கைக்குக் கைமாறும் பணமே - 01


இந்திய-தமிழகமருகே
ஈரேழு தீவுகளாம்
ஈழமென்ற பெயராம் - அங்கே
யாழ் வாசிக்கும் பாணன்
யாழொலி எழுப்பி இசைகாட்டி
அரசனிடம் பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணத்தில்
வேளாண்மைக்கு பெயர் போன
ஆற்றங்கரை ஊரிலே
ஐங்கரன் என்பான் பிறந்தான்!

ஆண்டவன் படைத்த
ஐங்கரனுக்கு ஏற்ற துணையாள்
அங்கிங்கு எங்கிருப்பாளோ
பொங்கியெழும் வீரன்
ஐங்கரனுக்கு
அகவை வந்தாச்சென அறிவாளோ
காளையிவன்
வாலையை எண்ணும் அகவையிலும்
வருவாயும் அறுவடையுமாய்
பணம் பண்ணுகிறான் பாரும்!

வள்ளியும் வெள்ளியும்
அப்பனும் ஆத்தாளுமாக
சுப்பனும் சுந்தரியும்
தம்பியும் தங்கையுமாக
அன்னக்கிளியும் அப்புச்சாமியும்
அண்டையும் அயலுமாக
கிழக்கால பிள்ளையார் கோவிலும்
மேற்கால முருகன் கோவிலும்
வடக்கால நெற்செய்கையும்
தெற்கால வெங்காய விளைச்சலும்
மாரி, கோடை மாறாத
வேலையும் வருவாயுமாய்
ஐங்கரனும் மின்னுகிறான்!
--தொடரும்--

Tuesday, 27 May 2014

தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி

வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.

கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம்  நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

Friday, 23 May 2014

மின்நூல்கள் பயன்தருமா?

உறவுகளே! பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.

"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்?" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.

மேலும், "மின்நூல்கள் பயன்தருமா?" என நீங்கள் கேட்கலாம்.

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

இன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

Friday, 16 May 2014

நீங்கள் வலைப்பூக்களில் எழுதுபவரா?

ஊடகங்களும் வெளியீடுகளும் பற்றித் தெரிந்திருப்பதோடு வாசகர் விருப்பு, வெறுப்புகளை அறிந்திருந்தால் எந்த ஊடகத்திலும் நீங்கள் எழுதி வெல்லலாம். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்ற சூழலில்
வலைப்பூக்கள் முக்கிய ஊடகமாகப் பேணப்படுகிறது. ஆயினும், தமிழைப் பேணி எழுதுவோரும் தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோரும் இருக்கிறார்கள். தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோர் தமிழில் எப்ப எழுதுவார்களோ, அப்ப தான் ஊடகங்களிலும் வெளியீடுகளிலும் தமிழைப் பார்க்கலாம். சரி, இனி வலைப்பூவில் எழுதுவோர் கற்கவேண்டிய பகுதியை பகிரலாம் என எண்ணுகிறேன்.

"தாம் எழுதுவதை தாமே பிரசுரம் செய்து கொள்ள முடிகிறது, உடனடியாக பல பேர் படிக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து கூட நமது எழுத்தைப் பற்றி எழுதுகிறார்கள்- இன்னும் எத்தனையோ காரணங்கள். நாமே ராஜா; நாமே மந்திரி." என்ற எண்ணத்துடன் வலைப்பதிவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. இந்த உண்மையை நிஷப்தம் (http://www.nisaptham.com/)  தளத்தில் 'எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?' என்ற பதிவில் அறிஞர் வா.மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவரது பதிவில் "தொடர்ந்து எழுதுவதில் சில சங்கடங்களும் இருக்கின்றன. அந்தச் சங்கடங்களை கொஞ்சம் அடையாளம் கண்டுகொண்டால் போதும்." என வழிகாட்டுவதோடு "விமர்சனங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நிராகரிக்கவும் கூடாது. பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள் என்றால் அதைப்பற்றி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு விட்டுவிடலாம். அது மண்டைக்குள் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும் போது subconscious-ல் இருக்கும் அந்த விமர்சனம் நம்மை மீண்டும் அந்தத் தவறை செய்ய அனுமதிக்காது." எனத் திறனாய்வின் சிறப்பையும் பகிருகிறார்.

ஈற்றில் "வலைப்பதிவு ஒரு நல்ல ஊடகம். கவனம் பெறுவதற்கும், நம் எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்குமான களம். எடுத்துக் கொள்கிற விஷயத்தில் சுவாரசியத்தைச் சேர்க்கத் தெரிந்தால் போதும். இங்கு நம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கலாம். சுவாரசியத்தைச் சேர்ப்பது என்பது பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. எழுத எழுத பழக்கத்தில் வந்துவிடும்." என வலைப்பூப் பதிவர்களுக்கான ஊக்கமருந்து ஒன்றையும் அவிட்டுவிடுகிறார்.

மேற்படி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவை உங்களுடன் பகிருவதால் நன்மை உண்டா? உலகெங்கும் தூய தமிழைப் பேண (http://yarlpavanan.wordpress.com/) சிறந்த வலைப்பூப் பதிவர்கள் தேவை என்பதால் அறிஞரது அறிவூட்டலைப் பகிருவதால் எனக்கு நிறைவு கிடைக்கிறது. வலைப்பூ ஊடகம் பற்றிய தெளிவோடு சிறந்த படைப்புகளை ஆக்க அறிஞரது அறிவூட்டல் உங்களுக்கும் உதவுமென நம்புகிறேன்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞரது அறிவூட்டலைப் படியுங்கள்.

எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?