Tuesday 24 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 04


பைங்கிளி வாழும் ஊராம்
கடல் சூழவுள்ள ஊராம்
கடற்கரையூரைக் கடந்தாம்
பிள்ளை ஒன்று பெற்றுக்கொள்ள
அருள் தாரும் அம்மாவென
நாகபூசணி அம்மன் காலில் வீழும்
அடியார்கள் செல்லும் தீவாம்
நயினாதீவை அறிவீரா?

முன்தோன்றித் தமிழரெனும் நாகர்கள்
நாகத்தை வழிபட்ட முன்னோர்கள்
போற்றிய நாகநயினார், நாகதம்பிரான்
கோவில் கொண்ட ஊராகையால்
நாகநயினார்தீவு, நயினார்தீவு என்றும்
மின்னிய இந்துக் கோவில்களை
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் அழித்தனராம்!

முத்துக்குளித்தல் இருந்தாலும் கூட
சங்குகுளித்தல் விஞ்சிய கடலாம்
சூழவுள்ள நயினாதீவின் உள்ளே
தமிழரெனும் நாகர்கள் வழிவந்த
வள்ளுவர் மக்கட்குழாம் வழிபட்ட
நயினாதீவு நாகம்மாள் கோவிலாம்
பின்வந்த ஆங்கிலேயன் பின்னே
தலைநிமிர்ந்த தமிழர் கோவிலாம்!

யாழ்மண்ணின் பண்ணைக் கடலண்டி
தலைகாட்டும் தீவுகள் ஏழில்
புனிதமண்ணாம் நயினாதீவுக்குப் போவோர்
காணும் கடற்கரையூரில் வாழும்
கந்தப்புவுக்கும் செல்லாச்சிக்கும் வாய்த்த
பைங்கிளி மருத்துவராகப் படித்தாலும்
மூத்தவன் பொன்னன் விண்ணன்
கடலும் அங்காடியுமாகச் சுழல
இளையவன் வேலன் வணிகனாம்!
--தொடரும்--

Sunday 22 June 2014

வலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா?

உறவுகளே! ஊடகங்களைப் பொறுத்தவரையில் படைப்பை ஆக்குவோர் படைப்பாளி என்றும் படைப்பை மதிப்பீடு செய்வோர் திறனாய்வாளர் என்றும் படைப்பை படிப்போர் / வாசிப்போர் / கேட்போர் / பார்ப்போர் தான் படைப்பின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாசகர் எனலாம். வலைப்பூ ஊடகத்தில் வலைப்பதிவர், கருத்துப்பதிவர், வாசகர் ஆகிய மூவரையும் காணலாம்.

ஊடகங்களில் திறனாய்வுக்கும் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வுக்கும் இடையில் என்ன உறவு இருக்கும்? படைப்பை வாசகர் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கத் திறனாய்வு உதவுகிறது. படைப்பின் பயன், தரம், சுவை எனச் சுட்டி வாசகர் வாசிக்கத் தூண்டவும் படைப்பாளி சிறந்த படைப்பை ஆக்கத் தூண்டவும் திறனாய்வு உதவணும்.

வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) என்றாலும் இதே நோக்கில் தான் அமைய வேண்டும். ஊடகங்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்? வலைப்பூக்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  வாசகர் பார்வைக்கு வாசகரை நாடும் அல்லது வாசகருக்கு அண்மையில் உள்ள ஊடகங்களை நுகரும் வாசகர்களே ஊடகங்களில் காணலாம். ஆனால், வலைப்பூக்களில் ஒரு வலைப்பூப் பதிவருக்கு மற்றைய வலைப்பூப் பதிவரே வாசகராக இருப்பர். மாறாகத் தேடுபொறிகளூடாகத் (Google) தகவல் தேடுவோரும் வாசகராக இருக்கலாம்.

இந்நிலையில் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா? ஆம்! தேவைதான்! கருத்துப்பகிர்வைக் கண்ட பிறரும் குறித்த பதிவைப் படிக்க வாய்ப்பு அதிகம். ஆகையால், பதிவை வாசகர் பார்வையிடவும் குறித்த வலைப்பதிவர் சிறந்த பதிவுகளை ஆக்கவும் கருத்துப்பகிர்வு (Comment) உதவுகிறதே! எவர் தனது வலைப்பூப் பதிவுகளிற்கு அதிக கருத்துப்பகிர்வு (Comment) பெற்றிருக்கிறாரோ அவர் வலைப்பூப் பதிவர்களிடையே முன்னணிப் (பிரபல) பதிவராக மின்னுகிறார் என்று பொருள்கொள்ளலாம்.

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் தமது தளத்தில் பதிவிடுவதோடு நட்புக்காகப் பிற வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வதும் வழமை. ஆயினும், அறிவுப்பசி உள்ள வலைப்பதிவர்கள் இதற்கப்பாலும் சென்று பல வலைப்பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகச் சிறந்த பதிவைக் கண்டாலோ கருத்து முரண்பாட்டைக் கொண்ட பதிவைக் கண்டாலோ அதன்பால் விருப்புக் கொண்ட வலைப்பதிவர்கள் கருத்துப்பகிர்வதும் உண்டு.

ஆயினும், சில வலைப்பதிவர்கள் பிறர் தமது வலைப்பூக்களில் கருத்துப் பகிர்ந்தாலும் தாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப்பகிர முன்வருவதில்லை. நாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப் பகிருவதால் என்ன நன்மை? முதலில் நாம் சிறந்த கருத்தைப் பகிருவதால் எம்மை அடையாளப்படுத்துகிறோம். இரண்டாவது குறித்த வலைப்பதிவரை ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக பலரது வலைப்பூக்களுக்குச் செல்வதால் எமது வலைப்பக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டுகிறோம்.

எனவே, வலைப்பூக்களை நடாத்தும் நாம் தேடுபொறிகளூடாக (Google) வரும் வாசகர் படித்தால் போதும் என பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிராமல் இருப்பது தவறு என்பேன். நமது வலைப்பூக்களின் முதல் வாசகர் பிற வலைப்பதிவர்களே என்றுணர்ந்து பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிர்தலே நன்று என்பேன்.

கருத்துப்பகிரும் (Comment) போது எமது விளம்பரங்களைப் போட்டுத்தள்ள வேண்டாம். உங்கள் வலைப்பூக்களது பிந்திய பதிவின் இணைப்பை உங்கள் கருத்தின் கீழ் நுழைப்பதில் தவறில்லை. ஆயினும் குறித்த வலைப்பதிவரை நோகடிக்கும்படி கருத்துப் பகிர வேண்டாம்.

உங்களுக்கே தெரியும் முன்னணிப் பதிவர்கள் எல்லோரும் உங்கள் வலைப்பூவில் கருத்துப் பகிரும்போது "நல்ல பதிவுக்கும் பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்" எனத் தனது கருத்தின் கீழ் இடுவார்கள். அதேவேளை "இந்த இடத்தில் இப்படி வர வாய்ப்புண்டா? எனக்கேதோ தவறு போன்று தெரிகிறது. ஆயினும் தங்கள் பக்கத்தில் வேறு விளக்கங்கள் இருக்கலாம், அதுபற்றி எனக்கு விளக்கம் தாருங்கள்!" என்று வலைப்பதிவரைக் குத்திக் குதறாமல் நோகடிக்காமல் பிழை சுட்டுபவர்களும் உள்ளனரே!

எனவே வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான். தங்களை அடையாளப்படுத்தவோ தங்களது வலைப்பூக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டவோ பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று நடுநிலைமையுடன் (பதிவர் பக்கத்திற்கும் வாசகர் பக்கத்திற்கும் இடையே நின்று) பதிவை மதீப்பீடு செய்யலாம். குறித்த பதிவில் சுட்டப்பட்ட செயல்களை முன்மொழியப்பட்ட கருத்துக்களை மதீப்பீடு செய்யலாம். அதாவது தங்கள் கருத்து  வாசகர்களையும் பதிவரையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஆகக்குறைந்த சொல்களால் “சிறந்த பகிர்வு, பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள், சுவையான பதிவு” என்றவாறு கூட உங்கள் கருத்தைப் பகிரலாம். "எடே யாழ்பாவாணா" என்பதை "அடேய் யாழ்பாவாணா" என்று திருத்தி உதவுங்கள் எனப் பிழைகளையும் நோகாமல் சுட்டிக்காட்டலாம். எப்படியோ வலைப்பூக்களை முன்னணிக்குக் கொண்டுவரவோ பின்னுக்குத் தள்ளவோ நாம் வழங்கும் கருத்துப் பகிர்விலேயே (Comment) தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

Wednesday 18 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 03

வள்ளியப்பனுக்கும் (வள்ளிக்கும்)
வெள்ளியம்மாவுக்கும் (வெள்ளிக்கும்)
மூத்தவனாய்ப் பிறந்த ஐங்கரனும்
தம்பியாம் சுப்பனையும்
தங்கையாம் சுந்தரியையும்
படிக்க வைச்சான் தானும் படிக்கையிலே!

ஆற்றங்கரை ஊராக்களைப் போல
என்ன தான் படித்தாலும்
வேளான்மை செய்யும் குடும்பமானாலும்
ஊர்ப்பள்ளியில் ஐங்கரன்
கணினி ஆசிரியராக இருக்க
விடிகாலையிலும் பொழுதுசாய்கையிலும்
தன் தோட்டத்துப் பயிர்களையே கொஞ்சுவான்!

சுப்பனோ கச்சேரி எழுதுநராயும்
சுந்தரியோ தொடக்கப்பள்ளி ஆசிரியையாயும்
தேப்பனோட தோட்டமும் கையுமாயிருந்த
பள்ளிக்குப் போயறியா வள்ளியப்பனும்
வெள்ளியும் பத்துவரை படித்தாலும் கூட
வள்ளிக்குத் துணையாய் வந்ததும்
அடுப்பூதியும் அவிச்சுப் போட்டுமிருக்க
அறுவடை நாளன்று எல்லோருமாய்
தோட்டத்தில் வந்துகூடி வேலையும் செய்வரே!

அண்டையாள் அன்னக்கிளியும்
அயலாள் அப்புச்சாமியும்
எண்ணிப்பார்த்தால்
ஐங்கரன் வீட்டுச் சுற்றத்தார்
எல்லோருமே தோட்டத்திற்கு வர
வேளாண்மையும் அறுவடையும் நகர
ஆற்றங்கரையூர் ஒற்றுமையாய் வாழ
தொண்டைமானாறு கைகுலுக்குமே!

தொண்டைமானாற்றின் அயலூர்களான
கரணவாய், செம்மணி, வெள்ளைப்பரவை போன்ற
இடங்களில் தானே விளையும் உப்பை
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசருக்கும்
இந்தியாவை ஆண்ட தமிழரசருக்கும்
ஒற்றுமையும் நல்லுறவும் இருந்தமையால்
மரக்கலங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்த வரலாறுமிருக்கே!

சிற்றரசன் கருணாகரத் தொண்டைமான் என்பாராம்
தமிழ்நாட்டில் இருந்து வந்திங்கே
யாழ்ப்பாண அரசரின் அனுமதியோட தான்
உப்பு வணிகம் இலகுவாய்த் தொடரவே
பாக்கு நீரிணையோடு ஆறு இணையும்
முகத்துவாரத்தினூடே இருந்த
வல்லிநதி என்னும் நன்னீர் ஓடையை
வெட்டிக் கட்டியமைத்த ஆறாகையால்
வல்லைவெளி தாண்டிய வல்லிநதியே
தொண்டைமானாறானதும் வரலாறே!
(தொடரும்)

பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா?

                                     தமிழ்த் திரைப்பாக்கூடம்
                                      திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு

2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..

பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com

வகுப்பு   -       சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி    -        பத்தாம் வகுப்பு

மேலும் தொடர்புக்கு :    

தமிழ்த் திரைப்பாக்கூடம்   -  9566196747 ,  8056161139

Monday 16 June 2014

நேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு!


இலக்கியத்தில் கவிதை, கதை எனத் தனித்து எழுதுவோரும் பல துறைகளில் எழுதுவோரும் உள்ளனர். ஊடகங்களில் அவர்களை நேர்காணல் பகுதிக்கு அழைத்து கேள்வி மேல் கேள்வியால் துளைத்து அறிவைப் பிடுங்கிப் பரப்புவார்கள். இதனால் படைப்பாளி கூறும் நுட்பங்களை நாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. நம்மாளுகள் இவ்வுண்மையை அறியாமல் நேர்காணல் பகுதியைப் படிக்க நாடுவதில்லை. அப்படியானவர்கள் "அவரவர் தன் (சுய) அறிமுகமாக இருக்குமெனப் படிப்பதில்லை." என்பர்.

நேர்காணல் பகுதியில் "தங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?" என்ற கேள்வியைத் தான் எல்லோரும் கேட்பர். அதில் தவறில்லையே. அடுத்து "எவ்வாறு எழுத்துத்துறையில் காலடி வைத்தீர்கள்?" என்று கேட்பார்கள். அதிலும் தவறில்லையே. இதற்காகவே ஒரு படைப்பாளி தன் (சுய) அறிமுகத்தைத் தருகின்றார். நேர்காணலை மேற்கொள்பவர் வாசகர் படைப்பாளியை அடையாளம் காணவே இவ்வாறு கேட்க முனைகின்றார்.

படைப்பாளிகளில் இருபாலரும் உள்ளனர். ஆண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். பெண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். சிலர் இருபாலார் சார்பாகவும் எழுதுவர். வாசகர் விருப்பறிந்து எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றி பெற்ற படைப்பாளி ஒருவருடனான நேர்காணல் ஒன்றை 4பெண்கள் தளத்தில் படிக்க முடிந்தது. "இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்" என்ற தலைப்பில் வெளியான பதிவை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.

http://wp.me/p2IA60-1y5

Monday 9 June 2014

வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்


நான் 1987 இருந்து எழுத்துலகில் காலடி வைத்ததாலும் 25/09/1990 இலே எனது முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அதுபோல 1995 இல் கணனியைப் படித்தும் 2010 இலிருந்தே இணைய வழியாக எனது இலக்கியங்களை வெளிக்கொணர முயன்றேன். அப்படியிருந்தும் 2012 இலேதான் வலைப்பூப் பக்கம் தலையைக் காட்டியிருக்கிறேன். இந்த இழி நிலைத் தகுதியோடு மேற்காணும் தலைப்பில் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர முனைகின்றேன்.

வலைப்பதிவர்கள் வலைப்பூவை நடாத்தத் தொடங்கியதும் தமது பதிவுகளை இட்டு நிரப்பியதும் முடிந்துவிட்டதாக இருந்துவிட முடியாது. அப்பதிவினை வாசிப்போர் கண்ணுக்குக் காட்டிக்கொள்ள வேணடியிருக்கிறது. அதற்காக லிங்டின், டுவிட்டர், கூகிள், பேஸ்புக் எனப் பல மக்களைய (சமூக) வலைத்தளங்களில் இட்டுப் பரப்புகிறோம். மேலும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள், தமிழ்வெளி, இன்ட்லி எனப் பல திரட்டிகளிலும் பதிவிடுகின்றோம். இத்தனையும் செய்த பின்னும் எத்தனை வாசகரைப் பெருக்கினோம் என்றால் மிக மிகக் குறைவே!

வாசகரைப் பெருக்கிக்கொள்ள முடியாமைக்கு வலைப்பதிவர்கள் தான் காரணம் என்பேன். ஏனோ தானோ என்று எப்படியாவது பதிவிட்டால் போதுமென்று இருப்பது, பிற அறிஞர்களின் பதிவை மீள் பதிவு செய்வது, பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுதல், பிறரது பதிவுகளிலிருந்து பொறுக்கித் தமது பதிவுகளில் நுழைத்தல் போன்ற குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்.

பொறுப்புள்ள பதிவாரக மிகச் சிறந்த பதிவுகளை ஆக்கிப் பதிவிடலாம். பிறரது பதிவுகளில் இருந்து பொறுக்கிய வரிகளின் பின்னே குறித்த வலைப்பூ முகவரியை இடலாம். பிறரது பதிவை மீள்பதிவு செய்வதைவிட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அறிமுகம் செய்யலாம். எப்படியாயினும் ஏழலில் (வாரத்தில்) ஒரு பதிவு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவு அல்லது மாதத்திற்கு மூன்று பதிவு என்ற போக்கில் பதிவுகளை இடலாம். இத்தனையும் செய்தால் உங்கள் வலைப்பூ தரமானதாக மேம்படுத்தலாம். ஆனால் வாசகர் எண்ணிக்கை பெருக்கவோ பதில் கருத்துத் (Comments) திரட்டவோ முடியாது என்பேன்.

ஆமாம்! பிறரிடம் எதிர்பாரப்பதை நாமே முதலில் வழங்கினால் முடியும் என்பேன். எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றவராவார். இதுவரை 891 பதிவர்கள் அவரது தளத்தில் பதிவிட்டுள்ளனர். (சான்று : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html) அப்படியாயின் அவர் ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நாடித் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். வலைப்பூ நடத்தும் போது ஏனைய வலைப்பூக்களுக்குச் சென்று அவரவர் சிறப்பைக் கற்றுக்கொண்டு கருத்துப்பகிர வேண்டும். அப்போதுதான் சிறந்த வலைப்பதிவராக முன்னேற வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மணம் திரட்டி ஒன்றே போதும். அதே வேளை கூகிள் பிளக்கர், வேர்ட்பிரஸ் Reading List இல் இணைத்த தளங்களுக்குச் சென்று கருத்துப் பகிர்ந்தால் போதுமென நம்புகிறேன். எப்படியிருப்பினும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப் பகிர வேண்டும். அப்போது தான் எமது வலைப்பூ அறிமுகம் பலருக்குக் கிட்டும். வலைப்பூ பற்றிய நுட்பங்களை அறிய கீழ்வரும் இணைப்பை சொடுக்குக.

வலைத்தள நுட்பம் (திண்டுக்கல் தனபாலன்)

வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். புதிய பதிவர்கள் மூத்த பதிவர்களின் வழிகாட்டலின்படி முன்னேற முயற்சி எடுக்கவும். அப்போதுதான் வலைப்பூக்களூடாக உலகெங்கும் தூய தமிழ் பரப்பலாம்.

Saturday 7 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 02

ஈரேழு தீவைக் கொண்டதாலே
'ஈழம்' என்றனர் என்றேன்
பாணன் யாழ் பாடி
பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணம் என்றேன் - அந்த
யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே
எட்டுத் தீவுகள் சொந்தமாமே!

இந்திய-தமிழகமருகே
நடுக்கடலை அண்டியே கச்சதீவாம்
யாழ் கோட்டையைக் கடந்தே
பண்ணைக்கடலும் மண்டதீவுமாம்
தூரத்தே நெடுந்தீவும் நயினாதீவுமாம்
அடுத்து அனலதீவும் எழுவைதீவுமாம்
ஆங்கே பருத்தித்தீவொடு புங்குடுதீவுமாம்
பைங்கிளி என்பாளின்
கடற்கரையூரைச் சுற்றிய தீவுகளாம்!

பைங்கிளியின் வீட்டார்
பிள்ளையாரைக் குப்பிட்டாலும்
இந்துக்கள் ஆனாலும் மீன்பிடித்தே
கடலன்னை போட்ட பிச்சையிலே
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்ல
பைங்கிளியும் அகவைக்கு வந்தாலும்
மருத்துவராகப் படித்து உயர்ந்தாளே!

பைங்கிளியின் வீட்டுக்குப் பின்னே
ஆங்காங்கே பனைகள் காற்றுக்கு ஆட
அப்பாலே துள்ளிக் குதித்து ஓடி வந்த
அலைகள் வந்து மோதும் கரையாம்
இடத்தாலே கெவி மாதா கோவிலாம்
வலத்தால ஐங்கரன் கோவிலாம்
அண்டையிலே அன்னம்மா வீடும்
அயலுக்க பெருமாள் வீடும்
வீட்டு வாசல் முன்னே
பேரூந்து ஓடும் பெரும் வழியாம்!

கந்தப்புவும் செல்லாச்சியும்
அப்பனும் ஆத்தாளுமாக
பொன்னனும் வேலனும்
பைங்கிளிக்கு அண்ணன்மாராக
பைங்கிளிக்கு வலை போட்ட பொடியள்
அவளின்ர அண்ணன்மாரிட்ட உதைபட
கற்பைப் பேணி மிடுக்காக மின்னும்
பைங்கிளியின் எடுப்புக்கு நிகராக
கடற்கரையூரில் எவளுமில்லையே!
--தொடரும்--