உங்கள் யாழ்பாவாணன்

ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையர்களின் மூத்த மகன் காசிராசலிங்கம் அவர்களுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையர்களின் மூத்த மகள் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

 ஆறு ஆசிரியர்களிடம் தொடக்கக் கல்வி (அரிவரி) யைத் தொடர்ந்தேன். பின் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதலாம் தவணை வரை படித்தேன். பின் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் தவணை இலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் சித்தன்கேணி வட்டு. இந்துக் கல்லூரியில் பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன்.

 பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆயினும், திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொடக்கநிலை வகுப்பில் ஓராண்டு படித்தேன். ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அதனைத் தொடர முடியவில்லை. பின் கணினித் தொழில்நுட்ப அறிவில் பல டிப்புளோமாக்கள் படித்தேன். கணினி விரிவுரை, மென்பொருளாக்கம், இணையத்தள வடிவமைப்பு போன்ற தொழில்களில் பணியாற்றுகிறேன். மேலும் இதழியல், உளவியல் டிப்புளோமாக்களும் படித்தேன்.
என்னைப் பற்றி மேலுமறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://kayjay.tk

நான் 1987 இல் இருந்து எழுதப் பழகினேன். எதிர்பாராத விதமாக எனது முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளியாகியது. அதேவேளை ஊரில படிப்பித்த தனியார் கல்வி நிலையத்தில் நாடக வசனம் எழுதி மாணவர்களை வைத்து நாடகத்தை இயக்கியுமுள்ளேன். ஊர் மேடையிலும் கவிதை பாடியுள்ளேன். இவ்வாறு தான் எழுத்துலகில் முன்னேறினேன்.

பின்னர் வீரகேசரி பத்திரிகையிலும் சில கவிதைகள் வெளியாகின. கொழும்பிலும் நாடக ஆற்றுகை ஒன்றில் பங்கெடுத்தேன். முல்லை மாவட்ட, புதுக்குடியிருப்பிலும் சில நிகழ்வுகளில் கவிதை பாடியுள்ளேன். போர்ச் சூழலும் இடப்பெயர்வும் எனது படைப்புகளைப் பேணி வைத்திருக்க இடமளிக்கவில்லை. இறுதிக் கட்டப் போரின் பின் 05/11/2009 இற்குப் பிறகு கருத்துக்களம் (Forum), வலைப்பூ (Blog) போன்றவற்றில் எனது பதிவுகளை எழுதத் தொடங்கினேன்.

கணினி அறிவியலில் எல்லாத்துறையிலும் நான் கற்றிருப்பினும் உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநலப் பேணுகைப் பணி செய்வதுமாக இன்று இணையத் தளங்களில் உலாவருகின்றேன்.

ஆயினும், இணையத் தளங்களில் தமிழறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்ததும் என்னைச் சிறப்பு எழுத்தாளர்/ மதியுரைஞர்(ஆலோசகர்) என அறிமுகம் செய்து வைத்ததும் எனக்கென இணையத் தள வாசகர் பலரை ஏற்படுத்தித் தந்ததும் தொடக்கத்தில் Tamil2Friends என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழ்நண்பர்கள் (Tamilnanbargal.com) தளமே! என் உயிர் பிரியும் வரை உங்களை என்னுடன் இணைத்து வைத்த தமிழ்நண்பர்கள்.கொம் தளத்திற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

எனது வலைப்பூக்களில் வெளியாகிய எல்லா இலக்கியப் பதிவுகளையும் இத்தளத்தில் அறிமுகம் செய்யவுள்ளேன். மேலும் இலக்கியக் கண்ணோட்டங்கள், வலைப்பூ அறிமுகங்கள், மின்நூல்கள், கணினி மென்பொருள்கள் எனப் பல வெளியிட இத்தளமூடாக முயற்சி செய்கிறேன். இத்தளத்திற்கு வருகை தருவோர்; எனது எல்லா வெளியீடுகளையும் பார்வையிட முடியும். எனது வெளியீடுகளில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை வெளிப்படுத்தினால், என்னால் மாற்றிக்கொள்ள முடியும். நானோ அறிவில் சின்னப் பொடியன்; எப்போதும் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

No comments: