எமது வெளியீடுகள்

வலைப்பக்க, வலைப்பூப் பதிவர்களிடையே படித்தறிவு, பட்டறிவு எல்லாவற்றிலும் சிறியன் நான் என்பேன். அதாவது, நான் பார்த்ததிலேயே என்னைவிடச் சிறந்த, படித்த, பட்டறிவில் பெரியோர் வலைப்பூக்களை நடாத்துகின்றனர். அச்சு ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை விட மின் ஊடகங்களில் சிறப்பாக வலைப்பூக்களில் (Wordpress, Blogger) சிறந்த பதிவுகள் வெளிவருகிறது என்பது உண்மையே! (அவ்வாறான தளங்களை இத்தளத்தில் அறிமுகம் செய்வேன்.)

நான் இணையத்தளப் பதிவராக வருமுன் அச்சு ஊடகங்களில் (பத்திரிகை, சஞ்சிகை) பதிவுகளை இட்டிருந்தேன். அரங்கு(மேடை)களிலும் எனது பதிவுகளைப் படித்திருக்கிறேன். தொடக்கத்தில் முகநூல் (Facebook), கீச்சுகள் (Twitter) போன்ற தளங்களில் பதிவு செய்த நான், பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவுகளை இட்டிருந்தேன். தொடர்ந்தும் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்து வருகின்றேன்.

எனது பதிவுகளைப் பொத்தகங்களாக்க (நூல்களாக்க) இறங்கியதும் அதற்கு இலகுவாக வலைப்பூக்களில் பதிவிட்டுத் தொகுக்கலாம் என எண்ணினேன். அதற்குத் தமிழ்மணம்.நெற் (அதிக பதிவர்களை இணைத்து வைத்திருக்கும் தளம்) திரட்டியும் ஒத்துழைத்தது. இம்முயற்சி எனக்கு நம்பிக்கை தரவே; ஒவ்வொரு நோக்கிலும் ஒவ்வொரு வலைப்பூவை உருவாக்கினேன். அவ்வாறே ஆறு வலைப்பூக்களில் எனது பதிவுகளை இட்டு வருகின்றேன்.

எனது நேரடி ஆளுமை அல்லது எனது வாழ்வுக்குத் துணைநிற்கும் (தொழில்) துறையாக கணினி மென்பொருள் சார்ந்த தளமாக ஒரு முதன்மைப் பக்கமும் (http://yarlsoft.tk/) என்னைப்பற்றிய விரிப்பை வெளிப்படுத்த ஒரு முதன்மைப் பக்கமும் (http://kayjay.tk/) ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன். மேலும், இதழியல் மற்றும் வெளியீடு சார்ந்த முதன்மைப் பக்கமாக (http://yppubs.blogspot.com/) இவ்வலைப்பூவைத் தமிழில் வைத்திருக்கிறேன்

உளநல வழிகாட்டலும் மதியுரையும் நோக்காகக் கொண்டு http://mhcd7.wordpress.com/ தளமும் தூயதமிழ் பேணும் நோக்கில் http://yarlpavanan.wordpress.com/ தளமும் யாப்பறிந்து பாபுனைய வாருங்களென பாவாக்க உதவும் பதிவுகளைப் பகிர http://paapunaya.blogspot.com/ தளமும் எனது சிறு சிறு பதிவுகளைத் திரட்டி வெளிக்கொணர http://eluththugal.blogspot.com/ தளமும் பேணுகின்றேன். மேலும் நூல்கள், மென்பொருள்கள் வெளியிடவும் எண்ணியுள்ளேன்.

ஊடகங்களும் வெளியீடுகளும் பற்றிய ஆய்வுகளையும்  மற்றும் நூல் வெளீயீடுகள் பற்றியும் அறிஞர்களின் நூல்கள்,  பதிவுகள் (வலைப்பூக்கள்) பற்றிய திறனாய்வையும் எனது தொடர்கள் அல்லது நீண்ட பதிவுகளையும் யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஊடாகத் தரலாமென எண்ணியுள்ளேன்.

உலகெங்கும் தமிழ் மொழிமூல வலைப்பூக்களை நடாத்தும் பதிவர்களின் தளமுகவரிகளை இணைத்துப் பேண http://tamilsites.doomby.com/ என்ற தளத்தையும் பேணுகின்றேன். இத்தளத்தில் இணைக்கப்பட்ட வலைப்பூக்களை யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஊடாக அறிமும் செய்ய இது உதவுமென நம்புகிறேன்.

எனது ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கும் வலைப்பூக்கள் மேம்பாட்டிற்கும் ஒத்துழைத்த எல்லோரும் எனது வெளியீடுகளுக்கும் ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகின்றேன்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.