Thursday, 2 October 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!

1 comment:

  1. அருமையான அறிவுரை! எழுத்து ரசிக்க வைப்பதோடு பயனுள்ளதாகவும் இருந்தால் நல்லதுதான்!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.