Showing posts with label யாழ்பாவாணனின் தொடர்கள். Show all posts
Showing posts with label யாழ்பாவாணனின் தொடர்கள். Show all posts

Tuesday, 15 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 06

கடற்காற்றோடு கலந்து வீசிய
அயலாள் பெருமாள் வீட்டு
"ஐயோ! அம்மோய்!" என்றழுகை
பைங்கிளி வீட்டிற்குள் நுழைய
வேலனும் பொன்னனும் வேளைக்கே
பெருமாள் வீட்டிற்குள்ளே இறங்க
பெருமாளுக்கு உடம்பு சரியில்லையென
பெண்டாட்டி போட்ட கூப்பாட்டிலே
கடற்கரையூரும் திரண்டு நின்றதே!

திரண்டு நின்றவர்களோ சொன்னார்கள்
முரண்டு பிடிக்காமல் செல்லுங்கள்
உடனேயே மருத்துவ மனைக்கென
உடனே வேலனும் பொன்னனும்
நம்ம பைங்கிளி இருக்க
சும்மா எங்கேனும் போகணுமா?
எங்கேயும் போகவும் வேண்டாம்
இங்கேயே பைங்கிளி வந்திட்டாளென
வந்துகொண்டே பெத்தவள் சொன்னாளே!

எங்கட பெருமாளுக்கு என்னவாச்சு
உங்கட பைங்கிளி வந்தாச்சென
பைங்கிளியைப் பெத்தவள் விசாரிக்க
பெருமாளும் நடந்ததைச் சொல்ல
பைங்கிளியோ கைநாடி பார்த்தாள்
ஏதோ காதுக்க செருகியவள்
பெருமாளின் நெஞ்சில முதுகில
வைத்துச் சோதித்துப் பார்த்தாள்
மருந்தையும் பருக்கியும் விட்டாளே!

திரண்ட கடற்கரையூரார் கண்டது
பைங்கிளியின் மருத்துவப் பணியா
பைங்கிளியாள் குடும்பத்தார் நற்குணமா
என்னமோ மருத்துவர் பைங்கிளியா
கடற்கரையூரின் கலங்கரை விளக்கா
பைங்கிளி மணமாகி விட்டாளா
பைங்கிளியின் மணமகன் நம்மூரா
பிறவூரானுக்குக் கழுத்தை நீட்டுவாளா
கடற்கரையூரார் வாய்கள் ஓயாதோ?
(தொடரும்)

Thursday, 3 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 05

ஆற்றங்கரையூராரின் ஒற்றுமையைக் கண்டு
அயலூராரிற்கும் இருப்புக் கொள்ளாது
அன்றொரு நாள் ஆங்கே
ஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில
பொன், பணம் பொறுக்கிய திருடனை
அன்னக்கிளி போட்ட கூப்பாட்டில
ஊரேகூடி நின்று பிடிச்சிட்டாங்க!

ஊரேகூடி வருமுன்னே - அங்கே
ஐங்கரன் வீட்டு நாயெல்லோ
அன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க
கள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த
ஊராருக்கு விளங்கிப் போச்சுதே
காசுக்கு மேலே படுப்பவள் தானே
ஐங்கரன் வீட்டு அண்டையாளென்றே!

ஊர்கூடி வீட்டுநிலை பரப்புதென
கள்ளரைக் காவற்றுறையில கொடென
அன்னக்கிளி மதியுரை கூறவே
ஐங்கரனும் நண்பர்களும் இறங்க
வைப்பகங்களில வைச்சதாலே தானே
கள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே
வீட்டிற்கு உள்ளே தேடியலைய
என்காதுக்கெட்ட நானழுதேனே
நானழுவதைக் கேட்ட நாய்களே
கள்ளரைக் கடித்ததென்றாள் அன்னக்கிளி!

ஆற்றங்கரையூராரின் களவுச் செய்தி
நாளேட்டில வெளிவந்ததைப் படித்த
உறவுக்காரங்க நேரே வந்தாங்க
வைப்பகங்களில வைக்காட்டித் தாவேன்
எங்கட வீடுகளில வைக்கலாமென்றே
தங்கட எண்ணங்களைப் போட்டுடைக்க
என்னட்ட என்ன இருக்கென எண்ணி
கேட்கிறியளெனக் கேட்டாள் அன்னக்கிளி!

பொன், பொருள், பணம் வைத்திருப்போர்
பொத்திப் பொத்தி வைத்திருப்பரே
சொல், செயல், நடை கண்டே
கள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே
நன்நாள் அலங்கரிப்பு ஆளிட்டையும்
கஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்
கண்டுகொண்ட கள்ளர் இறங்கவே
ஊரறியுமே பணக்காரர் யாரென்றே!
(தொடரும்)

Tuesday, 24 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 04


பைங்கிளி வாழும் ஊராம்
கடல் சூழவுள்ள ஊராம்
கடற்கரையூரைக் கடந்தாம்
பிள்ளை ஒன்று பெற்றுக்கொள்ள
அருள் தாரும் அம்மாவென
நாகபூசணி அம்மன் காலில் வீழும்
அடியார்கள் செல்லும் தீவாம்
நயினாதீவை அறிவீரா?

முன்தோன்றித் தமிழரெனும் நாகர்கள்
நாகத்தை வழிபட்ட முன்னோர்கள்
போற்றிய நாகநயினார், நாகதம்பிரான்
கோவில் கொண்ட ஊராகையால்
நாகநயினார்தீவு, நயினார்தீவு என்றும்
மின்னிய இந்துக் கோவில்களை
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் அழித்தனராம்!

முத்துக்குளித்தல் இருந்தாலும் கூட
சங்குகுளித்தல் விஞ்சிய கடலாம்
சூழவுள்ள நயினாதீவின் உள்ளே
தமிழரெனும் நாகர்கள் வழிவந்த
வள்ளுவர் மக்கட்குழாம் வழிபட்ட
நயினாதீவு நாகம்மாள் கோவிலாம்
பின்வந்த ஆங்கிலேயன் பின்னே
தலைநிமிர்ந்த தமிழர் கோவிலாம்!

யாழ்மண்ணின் பண்ணைக் கடலண்டி
தலைகாட்டும் தீவுகள் ஏழில்
புனிதமண்ணாம் நயினாதீவுக்குப் போவோர்
காணும் கடற்கரையூரில் வாழும்
கந்தப்புவுக்கும் செல்லாச்சிக்கும் வாய்த்த
பைங்கிளி மருத்துவராகப் படித்தாலும்
மூத்தவன் பொன்னன் விண்ணன்
கடலும் அங்காடியுமாகச் சுழல
இளையவன் வேலன் வணிகனாம்!
--தொடரும்--

Wednesday, 18 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 03

வள்ளியப்பனுக்கும் (வள்ளிக்கும்)
வெள்ளியம்மாவுக்கும் (வெள்ளிக்கும்)
மூத்தவனாய்ப் பிறந்த ஐங்கரனும்
தம்பியாம் சுப்பனையும்
தங்கையாம் சுந்தரியையும்
படிக்க வைச்சான் தானும் படிக்கையிலே!

ஆற்றங்கரை ஊராக்களைப் போல
என்ன தான் படித்தாலும்
வேளான்மை செய்யும் குடும்பமானாலும்
ஊர்ப்பள்ளியில் ஐங்கரன்
கணினி ஆசிரியராக இருக்க
விடிகாலையிலும் பொழுதுசாய்கையிலும்
தன் தோட்டத்துப் பயிர்களையே கொஞ்சுவான்!

சுப்பனோ கச்சேரி எழுதுநராயும்
சுந்தரியோ தொடக்கப்பள்ளி ஆசிரியையாயும்
தேப்பனோட தோட்டமும் கையுமாயிருந்த
பள்ளிக்குப் போயறியா வள்ளியப்பனும்
வெள்ளியும் பத்துவரை படித்தாலும் கூட
வள்ளிக்குத் துணையாய் வந்ததும்
அடுப்பூதியும் அவிச்சுப் போட்டுமிருக்க
அறுவடை நாளன்று எல்லோருமாய்
தோட்டத்தில் வந்துகூடி வேலையும் செய்வரே!

அண்டையாள் அன்னக்கிளியும்
அயலாள் அப்புச்சாமியும்
எண்ணிப்பார்த்தால்
ஐங்கரன் வீட்டுச் சுற்றத்தார்
எல்லோருமே தோட்டத்திற்கு வர
வேளாண்மையும் அறுவடையும் நகர
ஆற்றங்கரையூர் ஒற்றுமையாய் வாழ
தொண்டைமானாறு கைகுலுக்குமே!

தொண்டைமானாற்றின் அயலூர்களான
கரணவாய், செம்மணி, வெள்ளைப்பரவை போன்ற
இடங்களில் தானே விளையும் உப்பை
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசருக்கும்
இந்தியாவை ஆண்ட தமிழரசருக்கும்
ஒற்றுமையும் நல்லுறவும் இருந்தமையால்
மரக்கலங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்த வரலாறுமிருக்கே!

சிற்றரசன் கருணாகரத் தொண்டைமான் என்பாராம்
தமிழ்நாட்டில் இருந்து வந்திங்கே
யாழ்ப்பாண அரசரின் அனுமதியோட தான்
உப்பு வணிகம் இலகுவாய்த் தொடரவே
பாக்கு நீரிணையோடு ஆறு இணையும்
முகத்துவாரத்தினூடே இருந்த
வல்லிநதி என்னும் நன்னீர் ஓடையை
வெட்டிக் கட்டியமைத்த ஆறாகையால்
வல்லைவெளி தாண்டிய வல்லிநதியே
தொண்டைமானாறானதும் வரலாறே!
(தொடரும்)

Saturday, 7 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 02

ஈரேழு தீவைக் கொண்டதாலே
'ஈழம்' என்றனர் என்றேன்
பாணன் யாழ் பாடி
பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணம் என்றேன் - அந்த
யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே
எட்டுத் தீவுகள் சொந்தமாமே!

இந்திய-தமிழகமருகே
நடுக்கடலை அண்டியே கச்சதீவாம்
யாழ் கோட்டையைக் கடந்தே
பண்ணைக்கடலும் மண்டதீவுமாம்
தூரத்தே நெடுந்தீவும் நயினாதீவுமாம்
அடுத்து அனலதீவும் எழுவைதீவுமாம்
ஆங்கே பருத்தித்தீவொடு புங்குடுதீவுமாம்
பைங்கிளி என்பாளின்
கடற்கரையூரைச் சுற்றிய தீவுகளாம்!

பைங்கிளியின் வீட்டார்
பிள்ளையாரைக் குப்பிட்டாலும்
இந்துக்கள் ஆனாலும் மீன்பிடித்தே
கடலன்னை போட்ட பிச்சையிலே
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்ல
பைங்கிளியும் அகவைக்கு வந்தாலும்
மருத்துவராகப் படித்து உயர்ந்தாளே!

பைங்கிளியின் வீட்டுக்குப் பின்னே
ஆங்காங்கே பனைகள் காற்றுக்கு ஆட
அப்பாலே துள்ளிக் குதித்து ஓடி வந்த
அலைகள் வந்து மோதும் கரையாம்
இடத்தாலே கெவி மாதா கோவிலாம்
வலத்தால ஐங்கரன் கோவிலாம்
அண்டையிலே அன்னம்மா வீடும்
அயலுக்க பெருமாள் வீடும்
வீட்டு வாசல் முன்னே
பேரூந்து ஓடும் பெரும் வழியாம்!

கந்தப்புவும் செல்லாச்சியும்
அப்பனும் ஆத்தாளுமாக
பொன்னனும் வேலனும்
பைங்கிளிக்கு அண்ணன்மாராக
பைங்கிளிக்கு வலை போட்ட பொடியள்
அவளின்ர அண்ணன்மாரிட்ட உதைபட
கற்பைப் பேணி மிடுக்காக மின்னும்
பைங்கிளியின் எடுப்புக்கு நிகராக
கடற்கரையூரில் எவளுமில்லையே!
--தொடரும்--


Friday, 30 May 2014

கைக்குக் கைமாறும் பணமே - 01


இந்திய-தமிழகமருகே
ஈரேழு தீவுகளாம்
ஈழமென்ற பெயராம் - அங்கே
யாழ் வாசிக்கும் பாணன்
யாழொலி எழுப்பி இசைகாட்டி
அரசனிடம் பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணத்தில்
வேளாண்மைக்கு பெயர் போன
ஆற்றங்கரை ஊரிலே
ஐங்கரன் என்பான் பிறந்தான்!

ஆண்டவன் படைத்த
ஐங்கரனுக்கு ஏற்ற துணையாள்
அங்கிங்கு எங்கிருப்பாளோ
பொங்கியெழும் வீரன்
ஐங்கரனுக்கு
அகவை வந்தாச்சென அறிவாளோ
காளையிவன்
வாலையை எண்ணும் அகவையிலும்
வருவாயும் அறுவடையுமாய்
பணம் பண்ணுகிறான் பாரும்!

வள்ளியும் வெள்ளியும்
அப்பனும் ஆத்தாளுமாக
சுப்பனும் சுந்தரியும்
தம்பியும் தங்கையுமாக
அன்னக்கிளியும் அப்புச்சாமியும்
அண்டையும் அயலுமாக
கிழக்கால பிள்ளையார் கோவிலும்
மேற்கால முருகன் கோவிலும்
வடக்கால நெற்செய்கையும்
தெற்கால வெங்காய விளைச்சலும்
மாரி, கோடை மாறாத
வேலையும் வருவாயுமாய்
ஐங்கரனும் மின்னுகிறான்!
--தொடரும்--