Tuesday 28 October 2014

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?


பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.

அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...

காட்சி-1

முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!

வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!

முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!

வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!

முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?

வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!

முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?

வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!

முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!

வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!

காட்சி- 2

பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!

பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...

பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன்  ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!

பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!

பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?

பதிவர் - 04 : பட்டென்று வந்து
             சட்டென்று படித்து
             நறுக்கென்று கருத்திட
             வழி விடாமல் எவர் மீதும்
             பழி போடாதீர்கள்!

பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
             பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
             கட்டுப்பாடு ஏதுமின்றி
             கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
             கருத்துப் (Comments) போட எவருமில்லையே!

பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!

பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!

பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.

பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...

பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...

பதிவர் - 05 : எவ்வளவுக்கு  எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு  அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!

மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments)  என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.

முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!

Saturday 25 October 2014

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.


  1. கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.
  2. அச்சு இதழ்களில் வெளியிடுவது.
  3. மின் இதழ்களில் வெளியிடுவது.
  4. முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.
  5. சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.
  6. சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.
  7. சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.
  8. அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.


மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.

Friday 24 October 2014

தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு


"முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் - அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்
(http://tamilnanbargal.com/node/38552)
நண்பர் இழவழுதி
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...
இது
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல
உலகெங்கும் வாழும் தமிழருக்காக
எழுதப்பட்டது என்பேன்!
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
வாழ்ந்த தமிழர் - என்றோ
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...
"தமிழாய் நிமிர்ந்திடு
தமிழனாய் வாழ்ந்திடு" என்று
நண்பர் இழவழுதி சொல்வதில்
தப்பில்லைக் காணும்!

தமிழரின் ஒற்றுமையின்மைக்கு
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்
ஒற்றுமையின்மையே ஆணிவேர்
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து
தமிழகத்தை மட்டுமல்ல
தமிழன் உலகையே ஆளலாம்
தமிழையே
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து
தமிழ் மக்கள் இடையே
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

Tuesday 21 October 2014

தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!


வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

Thursday 16 October 2014

மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!


மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) தாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்


Thursday 2 October 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!