Sunday 21 September 2014

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

4 comments:

  1. நூலின் சிறப்பான அனைத்தையும் படித்தது போன்ற ஒரு உணர்வு சார், சிறப்பான மதிப்புரைக்கு நன்றிகள் சார்,, கவைதைகளும் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. ஒரு நூலே வாசித்ததுபோன்ற உணர்வு !

    கண்டிப்பாய் , இந்த மதிப்புரையைப்படிக்கும் ஒவ்வொருவரும் , எவ்வாறாயினும் இந்நூலை வாங்கிப்படிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள் . என் எண்ணமும் அஃதே!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.