Friday 26 September 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://www.box.com/s/exn2yefonnvoltly671v

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://online.fliphtml5.com/insb/ibao

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.


எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Tuesday 23 September 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

Sunday 21 September 2014

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

Wednesday 17 September 2014

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்

இன்றைய நுட்பங்களில் வலைப்பூக்கள் சிறந்த ஊடகங்களாக மின்னுகின்றன. சிறந்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் பலரது கைவண்ணங்களாலும் நாவண்ணங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. அது பலரைத் தமிழ்மணம் பேண ஊக்கமளிக்கிறது. அந்த வகையில் அடுத்தொரு முயற்சியாக வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள் பகிரப்படுவதனைக்  கருத்திற்கொள்ளலாம். இம்முயற்சி மேலும் வலைப்பதிவர்களின் செயற்றிறனைப் பெருக்கிக்கொள்ளப் பின்னூட்டியாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

இம்முயற்சியைத் தொடக்கிவைத்தவர்களுக்குக் காலில் வீழ்ந்து வணங்கி யாழ்பாவாணன் வெளியீட்டகம் நன்றி தெரிவிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளுக்கு யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும். உலகெங்கும் தமிழைப் பேண வலைப்பதிவர்களின் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கிறது. எனவே, வலைப்பதிவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாமும் மதிப்பளிப்பதையே விரும்புகின்றோம்.

உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் தம்பி ரூபன் அவர்களுக்குக் கீழ்வரும் அறிஞர்கள் விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

அறிஞர் விஜயா அம்மா அவர்கள்

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் வலைப்பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் யாழ்பாவாணன் வெளியீட்டகம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தம்பி ரூபன் அவர்கள் உங்கள் யாழ்பாவாணனுக்கும் தனது விருதுகளைப் பகிர்ந்துள்ளார். அவை பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும்  வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

Friday 12 September 2014

யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா?

நண்பர் கிங்ராஜ் தளத்தில்
http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_10.html
"ஒரு கடி" என்ற தலைப்பில்
“அந்தக் கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”
“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதுதான் ஆட்டம் அதிகம் இருக்கு”

என்றவாறு எழுதியிருந்ததைப் படித்ததும் இப்படி எழுத எனக்கும் தோன்றிச்சு! அதைக் கொஞ்சம் படித்த பின் கருத்துப் பகிர்வோமா...

நெடுநேரம் எண்ணிப் பார்தேன்
தென்னை மரம் ஏன் ஆடுது என்று
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்
அது தானே கள்ளையும் தருகிறது என்று

இப்படி நான் எழுதியதைப் படித்த பெரியோர் "யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடன்" என்பார்கள். உண்மையில் இதனைப் பாவரசர் கண்ணதாசன் தனது புத்தகமொன்றில் பதிவு செய்திருப்பதை படித்த பெரியோர் அறிந்தமையால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது. அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.

என்ன காணும் வலைப்பதிவு உலகில் யாழ்பாவாணன் தானே அடுத்தவர் பதிவை இடையிடையே புகுத்தி எழுதுகிறார்; இன்னும் பிறர் கண்ணில் சிக்கவில்லையா என்கிறீர்களா? அதற்கு முன் அங்கே படித்தேன்; அதில, இதில, உதில ஏட்டில் இருந்தது; அந்த, இந்த, உந்த இணைப்பில் இருந்தது என்றெழுதித் தப்பிக்கிறார் போலும்.

வலைப்பதிவர்களே! அடுத்தவர் பதிவுக் குறிப்புகளைத் தங்கள் பதிவுகளில் சான்றுக்காக இடையிடையே புகுத்தலாம். ஆயினும், புகுத்திய பதிவுக் குறிப்பை எழுதியவர் அல்லது வெளியிட்டவர் விரிப்பைச் சுருக்கிச் சுட்டியிருப்பின் இலக்கியத் திருட்டு இல்லை என்பேன். இல்லையேல் அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் வண்ணங்களில் வெளிப்படுத்த முன்வாருங்கள். எடுத்துக்காட்டாகப் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தை என் வண்ணத்தில் காட்டுகிறேன் பாரும்.
1
நல்ல நண்பர் வந்தார்
மெல்லத் தள்ளாடியே வந்தார்
சொல்லத் தடுமாறினார் - அவர்
மதுக்கடையில் இருந்து வந்ததை...
2
அங்குமிங்கும் ஆடும் பனையைப் பார்த்து
காற்றோடு பனை மரம் மோதுகிறதா
காற்றும் வேகமாய் அடித்து வீசுகிறதா
என்றெல்லாம் எண்ணிய பின்
பனையும் கள்ளைத் தருமெனப் படித்தேன்!
3
ஆடி ஆடித் தள்ளாடி வந்தால்
பாடிப் பாடிப் பாவாணனும்
அரை வயிற்றிற்கு உள்ளே தள்ளுவார்
நரைக் கிழவி விற்கும் குடிதண்ணீரென
என் காதலி
தன் தோழிக்குச் சொன்னாளாம்!

என் பாவண்ணத்தில் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தைப் படித்தீர்களா? நண்பர் கிங்ராஜின் கப்பல் கடியைப் படித்தீர்களா? எவரது எண்ணத்தையும் எவரும் தங்கள் கைவண்ணத்தில் எழுதலாம். அது இலக்கியத் திருட்டு அல்ல. அப்படி என்றால், வலைப்பதிவர்களே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்களேன்.

அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்து இலக்கியத் திருடனென்று பெயரெடுக்காமல், அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் கைவண்ணத்தில் ஆக்கிச் சிறந்த படைப்பாளி ஆக முன் வாருங்கள். இதற்குத் தான் பிறரது படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டுமென எனக்கு வழிகாட்டிய படைப்பாளிகள் சொன்னார்கள்.

Thursday 11 September 2014

சுகப்பிரியனின் சொல்லக்கூடாத உண்மை…


தமிழ்நண்பர்கள்.கொம் என்ற தமிழ்ப் படைப்புகளின் களம் என்ற வலைத்தளத்தை எவரும் மறக்க முடியாது, தமிழ்நண்பர்கள்.கொம் ஒரு தானியங்கித் திரட்டியும் கூட. நான் வலைப்பதிவர்களிடையே அறிமுகமாக அல்லது நானொரு வலைப்பதிவராக மின்ன தமிழ்நண்பர்கள்.கொம் தளமே பின்னூட்டி. நான் இன்றும் எனது வலைப்பூக்களில் வெளியிடும் பதிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் வெளியானவை தான். அந்த வகையில் 05/01/2012, வியாழன், - 10:49am அன்று வெளியான அறிஞர் சுகப்பிரியனின் "சொல்லக்கூடாத உண்மை…" என்ற கவிதைக்கு நான் வழங்கிய மதிப்பீட்டுப் பதிவை கீழே படியுங்கள்.

முதலில் அறிஞர் சுகப்பிரியனின் கவிதையிலிருந்து சில வரிகளைக் கீழே படியுங்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilnanbargal.com/node/37485

யாம் இருக்கப் பயமேன்
எடுத்து விடு நண்பா
பெண்களின் ஆடைகளில் உள்ள
பொட்டுக் கேட்டை மட்டுமல்ல
மக்களாய(சமூக)த்தின் பொட்டுக் கேட்டையும் தான்!
பெண்களே...
மக்களாய(சமூக)த்தின் கண்களே...
அருமையான அழகை பேணுங்கள்
ஆனால்
அழகற்ற உடலை அழகுபடுத்த
பொட்டுக்கள், வெட்டுகள் நிறைந்த
வலை போன்ற ஆடைகளை அணிவது
உங்கள் கற்புக்கு கேடு வருமே!
அடிப் பெண்ணே!
ஆள் பாதி ஆடை பாதி என்பது
ஆளின் அறிவை அழகுபடுத்துவது
அவ்வவ் ஆளின் செயல் பாதி
அவ்வவ் ஆள் அணியும் ஆடைகள் பாதி
(ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்)
என்றறிவீர்களா?
பிறந்த உடலை மூடிமறைக்க அமைத்த
ஆடைகளைக் கிழித்து
பிறந்த உடலைக் காட்டும்
போர்வை ஆக்கலாமா?
இத்தனை உண்மைகளை
அவிழ்த்துக் காட்டிய
அறிஞர் சுகப்பிரியனைப் பாராட்டுகிறேன்!
அறிஞர் சுகப்பிரியனின் கவிதையில்
பிறமொழிகள் புகுந்திருப்பது
தவிர்க்க இயலாத ஒன்றாயினும்
பிறமொழிச் சொல்களை
அடைப்புகளுக்குள் இட்டு - அதற்கான
தமிழ்ச் சொல்களை நேரடியாகப் பாவித்தால்
தூய தமிழ்க் கவிதையாயிருக்குமே!
சொல்லக்கூடாத உண்மை என்று
சொல்லிவைத்த அறிஞரின் எண்ணங்கள்
நடப்புக்காலத்தில் உலாவரும்
நம்ம பெண்களின் ஆடை வண்ணங்களும் - அதன்
அறுவடையாக எழும்
தமிழ்ப்பண்பாடு சீரழியும் நிலையுமே!
அறிஞர் சுகப்பிரியனின் பாடுபொருள்
நிறுத்துப் பார்க்கப்பட வேண்டிய
நல்ல படைப்புக்குச் சான்றாயினும்
இதைவிடச் சிறந்த படைப்புகளை
சுகப்பிரியனிடம் எதிர்பார்க்கிறேன்!

குறிப்பு: 05/01/2012, வியாழன், - 8:49pm அன்று தமிழ்நண்பர்கள்.கொம் இல் வெளியான " 'சொல்லக்கூடாத உண்மை…' என்ற பாவிற்கான திறனாய்வு http://tamilnanbargal.com/node/37497 " என்ற பதிவைச் சிறு மாற்றங்களுடன் மீழ்பதிவு செய்துள்ளேன்.

Friday 5 September 2014

தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு


தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தும்
பல நண்பர்களைப் பங்கெடுக்கச் செய்தும் உதவிய
எல்லோருக்கும் ரூபன் குழுவினர் சார்பில்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டி
முடிவு நாளை கொஞ்சம் நீடித்தால்
மேலும், பல உறவுகளை இணைக்க
வழிபிறக்கும் என்ற கருத்தை ஏற்று
இந்திய நேரப்படி 15/09/2014 நள்ளிரவு 12 மணி வரை
போட்டி முடிவு நாள் நீடிக்கப்படுகிறது!
மேலதிகத் தகவலைப் பெற:
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014_09_01_archive.html

தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்காதோர் பங்கெடுக்க வாருங்கள்...
இதுவரை பங்கெடுக்காத நண்பர்களைக் கூட
பங்கெடுக்கச் செய்து உதவலாம் வாருங்கள்...
உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் - மேலும்
பல போட்டிகளை நடாத்த ஊக்கம் தருமே!