Thursday 24 July 2014

விளம்பரங்கள் வடிவமைக்கலாம் வாங்க...


"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா?

மறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா? விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே!

எப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.

விளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.

மக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.

விளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா? கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.

Sunday 20 July 2014

யாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க!

என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். "கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.

1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே! இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.

இன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.

இவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே! ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.

இன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா? அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.

இவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக "யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பாருங்கள்.


Friday 18 July 2014

புதிய வலைப்பதிவர்களே! கொஞ்சம் கேளுங்கோ...

புதிய வலைப்பதிவர்களே! உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

கூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.

வலைப்பூவை தயாரித்தாச்சா? பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா? இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.
புளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.

அடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.

நண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.

Tuesday 15 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 06

கடற்காற்றோடு கலந்து வீசிய
அயலாள் பெருமாள் வீட்டு
"ஐயோ! அம்மோய்!" என்றழுகை
பைங்கிளி வீட்டிற்குள் நுழைய
வேலனும் பொன்னனும் வேளைக்கே
பெருமாள் வீட்டிற்குள்ளே இறங்க
பெருமாளுக்கு உடம்பு சரியில்லையென
பெண்டாட்டி போட்ட கூப்பாட்டிலே
கடற்கரையூரும் திரண்டு நின்றதே!

திரண்டு நின்றவர்களோ சொன்னார்கள்
முரண்டு பிடிக்காமல் செல்லுங்கள்
உடனேயே மருத்துவ மனைக்கென
உடனே வேலனும் பொன்னனும்
நம்ம பைங்கிளி இருக்க
சும்மா எங்கேனும் போகணுமா?
எங்கேயும் போகவும் வேண்டாம்
இங்கேயே பைங்கிளி வந்திட்டாளென
வந்துகொண்டே பெத்தவள் சொன்னாளே!

எங்கட பெருமாளுக்கு என்னவாச்சு
உங்கட பைங்கிளி வந்தாச்சென
பைங்கிளியைப் பெத்தவள் விசாரிக்க
பெருமாளும் நடந்ததைச் சொல்ல
பைங்கிளியோ கைநாடி பார்த்தாள்
ஏதோ காதுக்க செருகியவள்
பெருமாளின் நெஞ்சில முதுகில
வைத்துச் சோதித்துப் பார்த்தாள்
மருந்தையும் பருக்கியும் விட்டாளே!

திரண்ட கடற்கரையூரார் கண்டது
பைங்கிளியின் மருத்துவப் பணியா
பைங்கிளியாள் குடும்பத்தார் நற்குணமா
என்னமோ மருத்துவர் பைங்கிளியா
கடற்கரையூரின் கலங்கரை விளக்கா
பைங்கிளி மணமாகி விட்டாளா
பைங்கிளியின் மணமகன் நம்மூரா
பிறவூரானுக்குக் கழுத்தை நீட்டுவாளா
கடற்கரையூரார் வாய்கள் ஓயாதோ?
(தொடரும்)

Friday 11 July 2014

காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு


விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)
என்பது
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சு!
என்பது
'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை!
மேலுள்ள விரிப்பைப் பார்வையிட
கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://avargal-unmaigal.blogspot.com/2014/07/blog-post.html

மதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.

சரி! உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு! பின்னூட்டத்தில்  தெரிவிக்க மறந்து விடாதீர்கள்! என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.

படத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே! அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே! அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.

படத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை புலப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம் என்பதே! மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ! அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.

இந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே! வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும்! இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.

அப்படியாயின் உண்மைக் காதல் எது? காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்!

காதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை "பத்திரிகைச் செய்திகளே! http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html " என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே
காலம் மாறிப் போச்சு - இந்த
காதலும் மாறிப் போச்சு - அந்த
மதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.

"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)
விலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)" என்ற
மதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)!

Thursday 10 July 2014

ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்


அன்று;
நான் பிறக்கும் முன்
எனது யாழ்ப்பாணத்தில்
ஒர் எழுத்துப் பிழைக்கு
ஒரு "25 சதம்" வழங்கியது
ஒரு பத்திரிகை நிறுவனம்!
வாசிப்பதும்
பிழை பிடிப்பதும்
அறிவைப் பெருக்குவதும்
பணம் ஈட்டுவதும்
அன்றைய
வாசகரிடமும் இருந்ததே!
இன்றைய பத்திரிகைகள்
எழுத்துப் பிழைகளால்
நிரம்பி இருந்தாலும்
வாசகரும் பொருட்படுத்துவதில்லை
பத்திரிகை ஆசிரியரும் கவனிப்பதில்லை
எங்கட பிள்ளைகள் தான்
முட்டாள் ஆகின்றனரே!
நாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,
சிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்
எழுத்துப் பிழைகளோடு தான்
கடைத் தெருக்களில் தொங்குகின்றன
சில தொங்கினாலும்
திறந்து படிக்க இயலாதவாறு
கண்ணாடித் தாள்களால் மூடப்பட்டிருக்கும்
விரும்பியோர்
வேண்டிப் படிக்கலாம் என்று தான்!
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்
நிகழ்ச்சி நடத்துறாங்க
கண்டுக்க யாருமில்லையா?
விரும்பியோர்
கேட்கலாம்; பார்க்கலாம் என்றா
நடத்துறாங்க!
ஆயிரத்திற்கும் மேலான - தமிழ்
வலைப்பூக்கள் (Blogs) உள்ளனவாம்
உண்மையில் எத்தனையோ
எழுத்துப் பிழைகளோடு தான்
உலாவி வருகின்றனவாம்
உலாவும் கருத்துபதிவரும்
கண்டு கொள்ளாமையால்
எழுத்துப் பிழைகள் மலிந்த
வலைப்பூக்கள் உலாவ வழியாயிற்றோ!
நல்ல ஊடகங்களின் சிறப்பு
எழுத்துப் பிழைகளற்ற வெளியீடே...
வெளியீட்டின் பின் எண்ணி
எழுத்துப் பிழைகள் சீராகாது
வெளியீட்டின் முன் பண்ணி
எழுத்துப் பிழைகள் வாராது
ஊடகக்காரர் தான் பாருங்கோ
எங்கட பிள்ளைகள் முட்டாளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டுமே!



Sunday 6 July 2014

மூளைக்கு வேலை தரும் வலைப்பூ

யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா? சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.

“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் "சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்." என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66
அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

சரி! கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.

ஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

இனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.
முதலில் "காதலில் உண்மை உண்டா?" என்ற பதிவைப் படியுங்க:

''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''என்னான்னு?''
''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் !''
http://www.jokkaali.in/2012/11/blog-post_14.html

பொய் சொல்லுற காதலன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து "வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது?" என்ற பதிவைப் படியுங்க:

''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப்  பிடிக்குதா?''
''வீடா இது? பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_17.html

அறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே "To Let" க்குப் பதிலாக "Toilet" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.

அடுத்து "நகை உனக்கு! நங்கை நீ எனக்கு!" என்ற பதிவைப் படியுங்க:

''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_21.html

அறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்து "ரோஜாக்கள் ஜாக்கிரதை!" என்ற பதிவைப் படியுங்க:

"ஜாக்கிரதை!" என்ற தலைப்பில்
"ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம்!" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.
http://www.jokkaali.in/2012/11/blog-post_462.html

அறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.

அடுத்து "ASH TRAY கேள்விக்கு பதில் ஏது?" என்ற பதிவைப் படியுங்க:

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY!
http://www.jokkaali.in/2012/12/ash-tray.html

இதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY!) கேட்கையில் சிரிப்பு வருகிறதே! அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே!

அடுத்து "அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்?" என்ற பதிவைப் படியுங்க:

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க!''
http://www.jokkaali.in/2013/12/blog-post_24.html

படித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.

அடுத்து "தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்?" என்ற பதிவைப் படியுங்க:

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா!''
http://www.jokkaali.in/2013/11/blog-post_11.html

இன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

அடுத்து " 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்?" என்ற பதிவைப் படியுங்க:

''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே!''
http://www.jokkaali.in/2013/11/blog-post.html

இன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.

இறுதியாக "காதலன், காதலி என்றால் ஓகே!" என்ற பதிவைப் படியுங்க:

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
கள்ளச் சாவிகள் தான்!
http://www.jokkaali.in/2013/05/blog-post_28.html

திரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ? கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.

மேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா? இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று! எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.

நகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.

என்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே!

முடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.

Thursday 3 July 2014

கைக்குக் கைமாறும் பணமே - 05

ஆற்றங்கரையூராரின் ஒற்றுமையைக் கண்டு
அயலூராரிற்கும் இருப்புக் கொள்ளாது
அன்றொரு நாள் ஆங்கே
ஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில
பொன், பணம் பொறுக்கிய திருடனை
அன்னக்கிளி போட்ட கூப்பாட்டில
ஊரேகூடி நின்று பிடிச்சிட்டாங்க!

ஊரேகூடி வருமுன்னே - அங்கே
ஐங்கரன் வீட்டு நாயெல்லோ
அன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க
கள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த
ஊராருக்கு விளங்கிப் போச்சுதே
காசுக்கு மேலே படுப்பவள் தானே
ஐங்கரன் வீட்டு அண்டையாளென்றே!

ஊர்கூடி வீட்டுநிலை பரப்புதென
கள்ளரைக் காவற்றுறையில கொடென
அன்னக்கிளி மதியுரை கூறவே
ஐங்கரனும் நண்பர்களும் இறங்க
வைப்பகங்களில வைச்சதாலே தானே
கள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே
வீட்டிற்கு உள்ளே தேடியலைய
என்காதுக்கெட்ட நானழுதேனே
நானழுவதைக் கேட்ட நாய்களே
கள்ளரைக் கடித்ததென்றாள் அன்னக்கிளி!

ஆற்றங்கரையூராரின் களவுச் செய்தி
நாளேட்டில வெளிவந்ததைப் படித்த
உறவுக்காரங்க நேரே வந்தாங்க
வைப்பகங்களில வைக்காட்டித் தாவேன்
எங்கட வீடுகளில வைக்கலாமென்றே
தங்கட எண்ணங்களைப் போட்டுடைக்க
என்னட்ட என்ன இருக்கென எண்ணி
கேட்கிறியளெனக் கேட்டாள் அன்னக்கிளி!

பொன், பொருள், பணம் வைத்திருப்போர்
பொத்திப் பொத்தி வைத்திருப்பரே
சொல், செயல், நடை கண்டே
கள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே
நன்நாள் அலங்கரிப்பு ஆளிட்டையும்
கஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்
கண்டுகொண்ட கள்ளர் இறங்கவே
ஊரறியுமே பணக்காரர் யாரென்றே!
(தொடரும்)

Tuesday 1 July 2014

பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!


நான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.

வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.

நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.

படைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே! அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு? ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவாரா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே! அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு? எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.

வாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே! ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.

நண்பர்களே! எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.

பதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. "பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!" என்ற தலைப்பில் இத்தனையும் "பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.